சிவகாசி அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் பலி


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ரத்னா பட்டாசு தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால், ஒப்பந்த தொழிலாளர்கள் 8 பேர் தொழிற்சாலைக்கு வெளியே மரத்துக்கு அடியில் அமர்ந்து வேலை .பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே கனி, மாரிமுத்து, செல்லையா ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முருகன் என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
‘விதிகளை பின்பற்றாததே காரணம்’

மத்திய வெடிபொருள் பாதுகாப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றாததே, சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு வாரிய மண்டல துணை அலுவலர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவற்றை தொழிற்சாலைகள் முறையாக பின்பற்றுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்