விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்தாகூர் அலுவலகம் முற்றுகை

    

    விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்தாகூர் அலுவலகத்தை முற்றுகையிடவந்த மாணவர்களுக்கும் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
   இலங்கைப் பிரச்னையை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாணவர்கள் அகற்ற முயன்றபோது காங்கிரஸ் கட்சியினருடன் மோதல் ஏற்பட்டது.
   இதனையடுத்து மத்திய அரசு மற்றும் காங்கிரசைக் கண்டித்து விருதுநகரில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் 18 மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.