விருதுநகர் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் திடீர் சோதனை விருதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
  ரேஷன் கடைகளில் உள்ள அரிசி, சீனி, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு உள்ளிட்டவற்றின் தரம் குறித்து எட்டு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விருதுநகர் அருகே சதானந்தபுரம், மற்றும் தம்மநாயக்கன்பட்டியில் உள்ள ரேஷன் கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கும் ரேஷன் பொருட்களின் இருப்பு கணக்கில் உள்ளதை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், கடை விற்பனையாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மர்ம காய்ச்சலால்

   விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனிஷ்குமார் என்ற 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தங்கள் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  தேசிகாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது மகன் அனிஷ்குமார் என்ற அந்த சிறுவன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ராஜபாளையம் மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார்.
  அனிஷ்குமாரின் ஊரைச் சேர்ந்த அர்ஜூன்ராஜ் என்ற மற்றொரு சிறுவனும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  இந்த கிராமத்தில் வாறுகால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் பலருக்கு விஷக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.