விருதுநகரில் கிரனைட் முறைகேடு புகார்

         
        துரையில் அம்பலமான கிரனைட் குவாரி முறைகேடு விவகாரம், கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து தற்போது விருதுநகரிலும் தலை தூக்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் குண்டாக்கல் என்ற கிராமத்தை, தனியார் கிரனைட் நிறுவனம் மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதே போன்றதொரு புகார், தற்போது விருதுநகரிலும் எழுந்துள்ளது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல், வெள்ளையாபுரம் பகுதிகள், கிரனைட் குவாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாரிகளில் சோதனை நடத்த கோரிக்கை :
திருத்தங்கல் மற்றும் வெள்ளையாபுரம் பகுதிகளில் 9 கிரனைட் குவாரிகள் இருக்கின்றன. இவற்றில் 4 குவாரிகள் PRP நிறுவனத்திற்கும், 4 குவாரிகள் ஸ்டான்டர்டு நிறுவனத்திற்கும் சொந்தமானவை. இவற்றில் PRPக்கு சொந்தமான குவாரிகளில் வெட்டி எடுக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கற்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த குவாரிகளில் முறைகேடு நடந்ததா என இதுவரை ஆய்வு எதுவும் நடக்கவில்லை என்று கூறும் இப்பகுதி மக்கள், அவற்றில் சோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவாரி ஆய்வுக்கு சிறப்புக் குழு :
இதனிடையே, தமிழகத்தில் கிரனைட் குவாரிகள் அதிகமுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆய்வு செய்ய தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி ஆட்சியரிடம் மக்கள் புகார்:
இதனிடையே, தருமபுரி மாவட்டம் இராமியணஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வனப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரியால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குவாரிகளில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகள் மீது கற்கள் விழுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இராமியணஅள்ளி பகுதி மக்கள் கூறியுள்ளனர்.